விஜயின் 'ஜனநாயகன்' படம் வெற்றிகரமாக வெளிவரும்: நடிகர் ஜீவா

விஜயின் 'ஜனநாயகன்' படம் வெற்றிகரமாக வெளிவரும்: நடிகர் ஜீவா

 'ஜனநாயகன்' விஜயின் கடைசி படமாக இருக்கக்கூடாது எனவும், இப்படம் வெற்றிகரமாக வெளிவரும் எனவும் நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

நித்திஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ (Thalaivar Thambi Thalaimaiyil) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாடத்தை காண்பதற்காகவும், ரசிகர்கள் திரைப்படத்திற்கு அளித்து வரும் வரவேற்பைப் பார்ப்பதற்காகவும் நடிகர் ஜீவா, இயக்குநர் நித்திஷ் சகாதேவ் மற்றும் கோவப் ப்ரொடியூசர் ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள கிளியோபட்ரா திரையரங்கிற்கு வருகை தந்தனர்.

தூத்துக்குடி வந்த அவர்களுக்கு திரையரங்கு நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ரசிகர்களிடம் படம் குறித்த கருத்தைக் கேட்டறிந்த ஜீவா, அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அப்போது நடிகர் ஜீவா கூறியதாவது, “இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது, பொதுமக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் பொங்கல் ரேஸிலே இல்லை. ஜனவரி 30ஆம் தேதி தான் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், பொங்கலுக்கு அண்ணன் படம் ரிலீஸ் ஆகாத நிலையில், தம்பி படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தை மலையாள இயக்குநர் நித்திஷ் சகாதேவ் இயக்கியுள்ளார்.

படம் நன்றாக வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது. ஒவ்வொரு படமும் வெற்றி படமாக அமையும் போது, அடுத்த திரைப்படமும் நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே எனது ஆசை. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் அவர் சதம் அடிக்கும் போது கேட்டால், அடுத்ததாக சதம் அடிக்க வேண்டும் அதுதான் எனது ஆசை என்பார். அதுபோலத் தான் எல்லோருக்கும் எல்லா படமும் வெற்றிப் படமாக அமைய வேண்டும். அதற்காகவே அனைவரும் உழைக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது சென்சார் போர்டில் நிறைய கண்டிஷன் போட்டுள்ளார்கள். என்னுடைய ‘ஜிப்ஸி’ படம் வரும்போது, 40-க்கும் மேற்பட்ட கட் செய்யப்பட்டது. பல்வேறு காட்சிகள் பிளாக் அண்ட் ஒயிட்டாக வைக்கப்பட்டன. ஏன் இந்த படத்திற்கும் கூட சிறிய பிரச்சனை வந்தது. பின்னர் சரியாகிவிட்டது. ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் போர்டு பிரச்சனைகள் முடிந்து, அப்படம் வெற்றிகரமாக வெளிவரும்.

ஜனநாயகனே விஜயின் கடைசி படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனநாயகன் விஜயின் கடைசி படமாக இருக்கக் கூடாது என்பதே எனது விருப்பம். பொதுவாகவே, விஜயின் படங்கள் அனைத்துமே வசூலைக் குவித்து, திரையரங்கங்களுக்கும் - தயாரிப்பாளர்களுக்கும் வெற்றியைக் கொடுக்கும். அதேபோன்று ஜனநாயகன் திரைப்படமும் வெற்றி பெறும் என்பதை எனது கருத்து. மேலும், ‘சிவா மனசுல சக்தி’ (SMS) திரைப்படத்தை இயக்கிய இயக்குநருடன் இணைந்து ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த படமும் சிறப்பாக அமையும்” என நம்பிக்கை தெரிவித்தார்.