தமிழ் சினிமாவில் ரூ. 50 கோடி வசூலை தாண்டிய முதல் படம்.. இதுவரை ஓடிடியில் ரிலீஸ் இல்லை... ஏன்?
தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற சாதனையையும் ஏற்படுத்திய திரைப்படம் இதுவரை ஓடிடியில் விற்கப்படவில்லை என்பது தெரியுமா?
அந்தப் படம் தற்போது தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு பிரான்ஸ் வரை கொண்டாடப்பட்டு வரும் 'படையப்பா' திரைப்படம் தான். ரஜினிகாந்த் திரைவாழ்வில் அவருக்கு முக்கிய திருப்பமாக அமைந்த திரைப்படம் ‘படையப்பா’. கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
குறிப்பாக, அதில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு, பலராலும் பாராட்டைப் பெற்றது. ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தலான இசை என அனைத்தும் மாஸாக இருந்ததால், படையப்பா இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 1999-ல் வெளிவந்த படையப்பா திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் ரூ.61 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற சாதனையையும் ஏற்படுத்தியது படையப்பா. இந்தப் படத்தை தயாரித்தது ரஜினியே. தற்போது ரீ ரிலீஸிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. முன்பதிவில் மட்டும் 85 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
படையப்பா படத்தை பொறுத்தவரை முதல் நாள் ரூ.4 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, எப்போதும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படையப்பா படம் இதுவரை OTT தளங்களுக்கு விற்கப்படவில்லை என்பது தெரியுமா?.
தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பப்படும் படையப்பா இதுவரை ஓடிடி தளங்களுக்கு விற்கப்படவில்லை. இது ரஜினிகாந்தின் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு. அது ஏன் என்பதை ரஜினியே விளக்கமாக கூறியிருக்கிறார்.
"ஓடிடி தளங்களில் படையப்பா படத்தை வெளியிட வேண்டும் என பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், நான் எந்த நிறுவனத்திற்கும் அந்த உரிமையை வழங்கவில்லை. ஏனென்றால், மக்கள் அதை பெரிய திரையில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது எனது சினிமாவில் 50 வது ஆண்டு நிறைவை ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என விரும்பியே அவ்வாறு செய்தேன்" என்று ரஜினிகாந்த் அதை பற்றி கூறியிருக்கிறார்.