வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசன் ஒளிபரப்புக்கு வங்கதேச இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, வங்கதேச கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்க கூடாது என்ற கண்டனங்களும் எழந்தன. குறிப்பாக ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ரூ.9.2 கோடிக்கு வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த நிலையில், நாளுக்கு நாள் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க தொடங்கியதை அடுத்து, முஸ்தஃபிசூர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து, பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர் வரும் ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் தற்சமயம் கிரிக்கெட் அரங்கில் பதற்மான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அதனை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் ஐபிஎல் தொடரின் ஒளிப்பரப்பை காலவரையின்றி தடை செய்வதாக வங்கதேசத்தின் இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் எந்தவொரு போட்டியும் வங்கதேசத்தில் நேரலை செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளியான அறிக்கையில், "மார்ச் 26, 2026 அன்று தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான கேகேஆர் அணியில் இருந்து வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை நீக்கி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால் இதற்கான சரியான காரணத்தை பிசிசிஐ எங்களிடம் தெரிவிக்கவில்லை. மேலும் இந்த முடிவு வங்கதேச மக்களிடையே வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், வரும் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகள் மற்றும் நிகழ்வுகளின் ஒளிபரப்பிற்கும் வங்கதேசத்தில் தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி வருங்காலங்களில் இரு அணிகளுக்கும் இடையிலான இரு தரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவதிலும் பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.