BREAKING: இந்தியா அபார வெற்றி... தொடரை வென்றது
தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது.
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தெ.ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களை சேர்த்தது. தெ.ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டி ஹாக் 106, பவுமா 48 ரன்களை சேர்த்து அவுட் ஆகினர்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் 300 ரன்களை தாண்டலாம் என எதிர்பார்க்கப்பட்ட தெ.ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் கட்டுப்படுத்தப்பட்டது.
இதையடுத்து 271 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 ரன்களை சேர்த்திருந்தபோது அதிர்ச்சியளிக்கும் வகையில் அவுட் ஆனார்.
இதையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
111 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால், சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் ஆகியவை அடங்கும். இது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஜெய்ஸ்வால் விளாசும் முதலாவது சதமாகும். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 9வது சதமாகும். டெஸ்டில் 7 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 1 சதம் ஏற்கெனவே விளாசியுள்ளார்.
இதன்பின்னர் விராட் கோலியும் அதிரடியாக அரைசதம் விளாசினார். இதனால் 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 271 ரன்களை சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், கோலி 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.