ஆஸ்திரேலிய யு19 அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

ஆஸ்திரேலிய யு19 அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய யு19 அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்திய அண்டர்19 அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இந்திய யு19 அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா யு19 அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று மெக்கேவில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அலெக்ஸ் டர்னர் 6 ரன்னிலும், சிமோன் பட்ஜ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் லீ யங் அரைசதம் கடந்ததுடன் 66 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் ஹெனில் படேல், கிலான் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், உதவ் மோகன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஆயுஷ் மாத்ரே 4 ரன்னிலும், விஹான் மல்ஹோத்ரா 11 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்னிலும், வேதந்த் திரிவேதி 25 ரன்னிலும், ராகுல் குமார் 9 ரன்னிலும், ஹர்வன்ஷ் பங்கலியா ஒரு ரன்னிலும், கிலன் படேல் 26, ஹெனில் படேல் 22, தீபெஷ் தேவேந்திரன் 28 என விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக இந்திய யு19 அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய தரப்பில் கேசி பார்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 36 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீண்டும் இந்திய பேட்டர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்த இன்னிங்ஸிலும் அதிகபட்சமாக அலெக்ஸ் லீ யங் 38 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் ஆஸ்திரேலிய யு19 அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், 84 ரன்களை மட்டுமே இலக்காகவும் நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் ஹெனில் படேல், நமன் புஷ்பக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய யு19 அணியில் வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, ஆயூஷ் மாத்ரே 13 ரன்னிலும், விஹான் மல்ஹோத்ரா 21 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த வேதந்த் திரிவேதி - ராகுல் குமார் இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் வேதந்த் 33 ரன்களையும், ராகுல் குமார் 13 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய யு19 அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய யு19 அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.