நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் அனுபவ வீரர்கள்!
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் கீமர் ரோச் மற்றும் கவெம் ஹாட்ஜ் ஆகியோர் கம்பேக் கொடுத்துள்ளனர்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நவ.22 ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.
ஒருநாள் தொடரை முடித்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 2ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 10ஆம் தேதி வெலிங்டனிலும், மூன்றாவது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் அங்கமாகவும் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான இந்த அணியில் காயம் காரணமாக அல்ஜாரி ஜோசப் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோர் இடம்பிடிக்கவில்லை. முன்னதாக இவர்கள் இருவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கீமார் ரோச் இடம்பிடித்துள்ளார். முன்னதாக அவர் இந்தாண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்த நிலையில், அதன்பின் டெஸ்ட் அணியில் இருந்து நிக்கப்பட்டார். இந்நிலையில் தற்சமயம் அவர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆல்-ரவுண்டர் கவெம் ஹாட்ஜுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரும் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில், அதன்பின் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அவர்களுடன் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஓஜே ஷீல்ட்ஸ் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்தியா ஏ அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட இவர், அல்ஸாரி ஜோசப்பின் இடத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.