பாமக யாருடன் கூட்டணி என்பதை நானே அறிவிப்பேன்! அன்புமணி பரபரப்பு பேட்டி!

பாமக யாருடன் கூட்டணி என்பதை நானே அறிவிப்பேன்! அன்புமணி பரபரப்பு பேட்டி!

பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி? என்பது குறித்து நானே அறிவிப்பேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்புமணி கடந்த ஜூலை 23 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ''உரிமை மீட்க, தலைமுறை காக்க'' என்ற பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நெல்லைக்கு இன்று வருகை தந்த அன்புமணி தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை நேரில் ஆய்வு செய்து, அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்னர், தாமிரபரணி நதியை பாதுகாக்க தவறிய தமிழ்நாடு அரசு மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''தாமிரபரணி நதியில் குளித்தால் பல்வேறு மோசமான நோய் அபாயம் உள்ளது. அனைத்து விதமான திட மற்றும் திரவ கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பல்வேறு முயற்சிகளை பாமக சார்பில் மேற்கொண்டு வருகிறோம். தாமிரபரணியை காக்க தகுதியற்றவர்களே ஆட்சியில் இருக்காதீர்கள். நீதிபதிகள் ஆய்வு செய்தும், தாமிரபரணி அப்படியே தான் உள்ளது. கூவத்தை தாமிரபரணியாக மாற்ற கேட்கவில்லை. தாமிரபரணி நதியை கூவமாக மாற்ற வேண்டாம் என்று தான் கேட்கிறோம்.

மத்திய அரசு தாமிரபரணி நதியை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும். முதலமைச்சர், பொறுப்பு அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் நதியை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்.

சாதி என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால், கலைஞர் பெயரிலாவது கணக்கெடுப்பை நடத்துங்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசுக்கு சமூக நீதி பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. இருமல் மருந்து விவகாரத்தில் மருத்துவர் ஒருவரை மட்டும் கைது செய்தது என்ன பயன்? மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி, மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகியோரை கைது செய்ய வேண்டும்.

பாமக யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் நானே அறிவிப்பேன். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார்.

கரூர் விவகாரத்திற்கு பின்னர் பல கட்டுபாடுகள் நீதிமன்றம் விதித்துள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அது போன்று நடத்த எங்களிடம் பொருளாதார வசதி கிடையாது. மக்களை சந்தித்து தான் போராட்டம் நடத்த முடியும்.

இந்தியாவில் எங்குமே இல்லாத நிபந்தனைகள் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் உள்ளது? விஜய்யுடன் பாமக கூட்டணி சேருமா? என்பது போகப் போக தெரியும்'' என்று அன்புமணி தெரிவித்தார்.