கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி மேல்முறையீடு! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி மேல்முறையீடு! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்தது.

இருப்பினும், இந்த வழக்கில் சதி இருக்கிறது என்றும், எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறும், 7 பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்தது. ஆனால், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பாஜகவின் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவானது இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு அவசர விசாரணைக்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரணையில் மனுதாரர் திருப்தி அடையவில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கான மனு நிராகரிக்கப்பட்டதாக எடுத்துரைத்தார். இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை (அக்.10) இந்த மனு மீது விசாரணை நடத்த தலைமை நீதிபதி அமர்வு ஒப்புக்கொண்டது.

முன்னதாக, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த முழு விவரங்களை சேகரிக்கவும் சென்னை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. மேலும் தவெக கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் விமர்சித்தது. இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணையை தொடங்கி இருக்கிறது.