60 ஆண்டுகளில் இல்லாத வகையில் தமிழகத்தில் நெல் விளைச்சல் - அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்!

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பருத்தியப்பர் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தமிழகத்தில் டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடி பரப்பளவு 6.31 லட்சம் ஏக்கராக அதிகரித்ததால், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் 3.87 லட்சம் ஏக்கர் பயிரிடப்பட்டது. ஹெக்டருக்கு 6 மெட்ரிக் டன் நெல் உற்பத்தியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று வரை 1,728 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 7.02 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 97,125 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு ரூ.1606.65 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், கூடுதலாக 52,212 விவசாயிகளிடம் 3.92 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 851.65 கோடி விவசாயிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
2025-2026 ஆம் ஆண்டிற்கு 3.02 லட்சம் மெ.டன். கொள்ளவு கொண்ட, 28 மேற்கூரையிட்ட நெல் சேமிப்புத் தளங்களும், 38 இடங்களில் 62,750 மெ.டன். கொள்ளளவு கொண்ட செயல்முறைக் கிடங்குகளும் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை, நாளொன்றிற்கு 12-க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் மூலமாகவும், 4000-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாகவும் பிறமாவட்டங்களுக்கு நெல் நகர்வு செய்யப்பட்டு அரவை முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டங்களிலிருந்து தினசரி 35 ஆயிரம் மெ.டன் நெல் வெளி மாவட்டங்களுக்கும், கிடங்குகளுக்கும் சேமிப்பதற்காக நகர்வு செய்யப்படுகிறது. நடப்பாண்டில் அதிகப்படியான நெல் வரத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் 3.34 லட்சம் மெ.டன் கொள்ளளவு கொண்ட 25 திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, 69,883 மெ.டன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைவது குறைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்குத் தேவையான 2.65 கோடி சாக்குகள், சணல் ஆகியவை கையிருப்பில் உள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினைத் தூற்றி கோணிகளில் பிடித்து அட்டி போடுவதற்கும், லாரிகளில் ஏற்றுவதற்கும் கூலியாக ரூ.3.25 இருந்ததை, ரூ.10 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தலைமை அலுவலகத்திலிருந்து 5 பொது மேலாளர்கள், மேலாளர்கள் தலைமையில் 9 குழுக்களும், மண்டல மேலாளர்கள் தலைமையில் 12 குழுக்களும் அமைத்து டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் இயக்கப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.