வாணியம்பாடி அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிப்பு
வாணியம்பாடி அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான அலசந்தாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய கொல்லி வட்டம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு விவசாய பணிகள் மேற்கொண்ட போது புதர் மண்டிய நிலையில் இருந்த ஒரு கல்லை அப் பகுதி மக்கள் கண்டறிந்துள்ளனர். பின்னர், அந்த கல்லை ஆஞ்சநேயர் கோயில், அய்யனார் கோயில் கல் என பல்வேறு பெயர்களை வைத்து அந்த கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் அலசந்தாபுரம் ஊராட்சி 5 வது வார்டு உறுப்பினர் சந்திரசேகர் என்பவர் இந்த கல் ஏதோ பழைமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்லாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அவர், திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரும் வரலாற்றியல் ஆய்வாளருமான முனைவர் ஆ. பிரபுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், பேராசிரியர் பிரபு தனது குழுவினருடன் அந்த பகுதியில் களப்பணியை மேற்கொண்டார்.
அப்போது 5 அடி அகலம் 8 அடி உயரம் கொண்ட அந்த நடு கல்லில் மூன்று உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நடு கல்லில் வீரன் உருவம், இடது கையில் வில்லும் வலது கையில் கட்டாரி என்ற ஆயுதமும் ஏந்திய நிலையில் உள்ளது. வீரனுக்குப் பின்புறம் அம்புகளைக் கைகளில் தாங்கிய நிலையில் ஒரு மனித உருவம் நிற்கிறது. அடுத்ததாக சாமரம் வீசிய நிலையில் ஒரு பெண்ணுருவமும் உள்ளது.
இந்த நடுகல்லானது, போரில் வீர மரணம் அடைந்த ஒருவருக்காக வைக்கப்பட்டதாக இருக்கும் என பேராசிரியர் பிரபு குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய பேராசிரியர் பிரபு, "வீரன் தலைமை மீது கொண்டையும் காதுகளில் குண்டலமும் கழுத்தில் சரபளியும், இடையில் சிறிய கத்தியுடன் கூடிய கச்சையும் அணிந்து காணப்படுகிறார். வீரனின் உருவ அமைப்பைப் பார்க்கும் போது, இந்த நடுகல்லானது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இது போன்ற ஆவணங்களைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.