கள்ளக்குறிச்சி அருகே சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து; 4 பேர் உயிரிழப்பு
திருவிழாவில் பலூன்களுக்கு காற்று நிரப்ப பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் இன்று நடைபெற்ற ஆற்று திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்து, மக்கள் வீடு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், இரவு சுமார் 7 மணியளவில் அந்த பகுதியில் பலூன்களுக்கு காற்று நிரப்ப பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.
இந்த விபத்தில் சிலிண்டரின் உதிரிபாகங்கள் தாக்கியதில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திடீர் விபத்து காரணமாக மணலூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில், தீயணைப்பு துறையினரும், சிலிண்டர் வெடிப்புக்குப் பின் ஏற்பட்ட தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கேஸ் பலூன் நிரப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் முறையாக அனுமதியுடன் வாங்கப்பட்டதா? பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? அலட்சியத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் முழு விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். ஆற்று திருவிழா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டி உள்ளது.
இந்த விபத்து குறித்து மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.