கூகுள் ஏஐ மையம் அமைவது இந்தியாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பிரேமலதா வாழ்த்து

கூகுள் ஏஐ மையம் அமைவது இந்தியாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பிரேமலதா வாழ்த்து

கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கும், உலக அரங்கில் வல்லரசாக உருவெடுப்பதற்கும் ஒரு முக்கிய அடையாளமாக அமைகிறது. அமெரிக்காவைத் தவிர, வெளிநாடுகளில் கூகுள் நிறுவனத்தின் பெரிய முதலீடு இந்தியாவில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டிருப்பது, நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.

இந்த 1.3 லட்சம் கோடி மதிப்பிலான ஏஐ மையம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டிருப்பது இந்தியாவிற்கு அமைந்த மிகப் பெரிய வாய்ப்பு. இளைஞர்கள் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த ஏஐ மையம் உருவாக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதன் மூலம் பொருளாதாரம், வணிகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா மேலும் முன்னேறும்.

இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் இந்த மையம் ஒரு முக்கிய பங்காற்றும். இதேபோன்று, தமிழ் நாட்டிலும் இத்தகைய உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழரின் விருப்பமாகும். தமிழகத்தில் இதுபோன்ற திட்டங்கள் உருவானால், அது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, இந்த வாய்ப்பு ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்க வேண்டும். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தமிழகத்தை சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை மற்றும் அவரது குழுவினருக்கும் இந்த மாபெரும் திட்டத்திற்காக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.