'அஞ்சாத சிங்கம்' ஜெய்ஸ்வால் சதம் * இந்திய அணி ஆதிக்கம்

'அஞ்சாத சிங்கம்' ஜெய்ஸ்வால் சதம் * இந்திய அணி ஆதிக்கம்

டில்லி டெஸ்டில், ஜெய்ஸ்வால் 173*, சாய் சுதர்சன் 87 ரன் எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 318/2 ரன் எடுத்திருந்தது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கியது.

'டாஸ்' வென்ற இந்திய அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங், ஜோஹன் நீக்கப்பட்டு ஆண்டர்சன் பிலிப், விக்கெட் கீப்பர் டெவின் இம்லச் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி நிதான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன் (17.3 ஓவர்) சேர்த்த போது, வாரிகன் சுழலை எதிர்கொள்ள கிரீசை விட்டு வேகமாக வெளியே வந்தார் ராகுல். பந்து விக்கெட் கீப்பர் டெவினுக்கு செல்ல, 'ஸ்டம்டு' ஆகி திரும்பினார் ராகுல் (38).

ஜெய்ஸ்வால், தமிழகத்தின் சாய் சுதர்சன் இணைந்தனர். இருவரும் ரன் வேகத்தை அதிகரிக்க, இந்தியா 30 ஓவரில் 112/1 ரன் எடுத்தது. பியர்ரே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சாய் சுதர்சன், டெஸ்டில் தனது இரண்டாவது அரைசதம் கடந்தார்.

பியர்ரே பந்தில் 2 ரன் எடுத்த ஜெய்ஸ்வால் டெஸ்டில், 7வது சதம் கடந்தார். சாய் சுதர்சன் 58 ரன் எடுத்த போது கிரீவ்ஸ் பந்தில் கொடுத்த 'கேட்சை' வாரிகன் நழுவவிட்டார்.

வாய்ப்பை பயன்படுத்திய இவர் சதம் அடிப்பார் என நம்பப்பட்டது. மாறாக 87 ரன் எடுத்த போது, வாரிகன் சுழலில் 'எல்.பி.டபிள்யு.,' ஆனார். 'ரிவியு' கேட்டும் பலனில்லாமல் போக, விரக்தியுடன் திரும்பினார்.

அடுத்து ஜெய்ஸ்வால், சுப்மன் இணைந்து நிதானமாக ஆடினர். இந்திய அணி 86 ஓவரில் 300/2 ரன்களை எட்டியது. பிலிப் ஓவரில் (87) ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 318 ரன் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் (173), சுப்மன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாளில் இந்திய பேட்டர்கள் வேகமாக ரன் சேர்த்து, வெஸ்ட் இண்டீசிற்கு நெருக்கடி தரலாம்.