"16 ஆம் நாள் காரியம் முடிந்ததும் உண்மையை சொல்வோம்"- சென்னை திரும்பிய ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி!

"16 ஆம் நாள் காரியம் முடிந்ததும் உண்மையை சொல்வோம்"- சென்னை திரும்பிய ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி!

கரூர் துயரத்தில் 16 ஆம் நாள் காரியம் முடிந்ததும் உண்மையை சொல்வோம் என்று சென்னை திரும்பிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்று இருந்தார். விஜய் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆதார் அர்ஜுனா டெல்லி சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா இன்று டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''நமது வீடுகளில் இறப்பு ஏற்பட்டால் 16 நாள்கள் துக்கம் அணுசரிப்போம். அதுபோல நாங்கள் தற்போது துக்கத்தில் உள்ளோம். எங்களது குடும்பத்தினர் 41 பேரை இழந்து தவிக்கிறோம்.

எங்களால் இந்த துக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை. 16 நாள்கள் காரியம் முடிந்த பிறகு நாங்கள் நிகழ்வு குறித்து பேசுவோம். எங்கள் மீதான அவதூறுகளுக்கு பதில் கூறவோ அல்லது உண்மையை வெளிக்கொண்டு வரவோ இந்த 16 நாள்களில் எதுவும் பேச மாட்டோம். நாளையுடன் 14 நாள் ஆகிறது. 16 நாள்கள் காரியம் முடிந்த பிறகு எங்கள் பக்கம் உள்ள நியாயங்கள் மற்றும் உண்மைகளை கண்டிப்பாக சொல்லுவோம்.

எங்கள் கட்சியின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி நிர்வாகிகளை கைது செய்யக்கூடிய நடவடிக்கைகள் நடக்கின்றன. இந்த இழப்பையும், வலியையும் தாங்கிக் கொண்டு அமைதியாக மக்களோடு இருக்கும்போது எங்கள் கட்சியை முடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். எங்கள் தலைவர் ஒரு சாமானிய மனிதன். நம்பிக்கையுடன் நீதித்துறையை நாடி உண்மையைக் கொண்டு வருவதற்காக எங்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

பதினாறு நாட்கள் காரியம் முடிந்ததும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கான பயணத் திட்டத்தை நாங்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். 16 நாட்கள் முடிந்த பின்பு மற்றதை பேசுவோம். எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். டெல்லியில் நிறைய பத்திரிகையாளர்கள் கடந்த 3 நாட்களாக வீட்டு முன்னால் இருந்தனர். அவர்களை சந்திக்க முடியவில்லை. அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு சாமானிய மனிதனாக நாங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம். அப்போது உண்மை வெளிவரும்.

எங்கள் தலைவர் சொல்லி இருக்கிறார். கட்சியின் மாவட்ட செயலாளர்களை கைது செய்து கொண்டு இருக்கின்றனர். சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடக்கிறது. அவர்கள் குடும்பத்தினரையும், அவர்களையும் சட்டத்தின்படி வெளியில் கொண்டு வர வேண்டும். அதற்கான பணி நடக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மிகவும் நன்றி. 16 நாள் காரியம் முடிந்ததும் கண்டிப்பாக எல்லா உண்மைகளையும் சொல்வோம். எங்கள் மீதான அவதூறுகள் குறித்தும், தவறான செய்திகள் குறித்தும் இப்போது பேசுவதற்கு நான் தயாராக இல்லை." என ஆதவ் அர்ஜுனா கூறினார்.