புதிய அடிமைகளை பாஜகவினர் வலைவீசி தேடி வருகின்றனர்! உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

பழையவர்கள் போதாது என புதிய அடிமைகளை பாஜகவினர் வலை வீசி தேடி வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் முத்தமிழ் பேரவை அரங்கில் பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்று நூற்றாண்டு மலரை வெளியிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், "பெரியார் தொண்டனாக, மாணவனாக இந்த நிகழ்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் பேரனாக மட்டும் இல்லாமல், பெரியார், அண்ணா, ஆனைமுத்து ஆகியோரின் கொள்கை பேரனாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்" என்றார்.
தொடர்ந்து, "கிண்டியில் உள்ள ஆளுநர் ரவி நம்முடைய நண்பர் தான். பாசிச பாஜகவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக நினைத்து நமக்கு செய்து கொண்டிருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு யாருடன் போராடும்? யாரை எதிர்த்து போராடும்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ரவி அவர்களே... உங்களோடு தான் தமிழ்நாடு போராடும். மாநில உரிமைக்காக தமிழ்நாடு போராடும். சமூகநீதிக்காக தமிழ்நாடு எப்போதும் போராடும். மத, சாதி வெறியை எதிர்த்து தமிழ்நாடு போராடும். இந்தியை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடும். ஒன்றிய பாசிச பாஜகவை எதிர்த்து என்றும் தமிழ்நாடு போராடும்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை முதலில் தொடங்கியவர் பெரியார். அன்று தொடங்கி இன்று வரை இந்தியை திணிக்க ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி செய்தனர். மற்றவர்கள் அனைவரும் ஏற்று கொண்ட நேரத்தில் தமிழக முதல்வர் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமக்கான நிதியை தர மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறினார். 2500 கோடி ரூபாய் அல்ல, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி சட்டப் போராட்டம் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். இது பெரியாருக்கான வெற்றி.
தந்தை பெரியார் தமிழகத்தை பக்குவப்படுத்தி வைத்துள்ளார். இதனால் தான் பாஜகவின் எந்த ஒரு தில்லுமுல்லும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அதனால் தான் அதிமுகவை மிரட்டி அவர்கள் தோள் மீது ஏறி இங்கு சவாரி செய்கின்றனர். பழையவர்கள் போதாது என இப்போது புதிய அடிமைகளை வலை வீசி பாஜக தேடி வருகின்றனர்.
எத்தனை புதுப்புது அடிமைகளோடு பாஜக வந்தாலும், தமிழ்நாடு சுயமரியாதை மண் என 2026 சட்டமன்ற தேர்தல் மீண்டும் அவர்களுக்கு நிரூபித்து காட்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அதிமுக கட்சியை வாடகைக்கு எடுத்து, தற்போது அதனை உள் வாடகைக்கு விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு சுயமரியாதை என்றால் என்னவென்று தெரியாது. கார் மாறி சென்றால் கூட பரவாயில்லை. விழுகிற காலையும் மாற்றுபவர் தான் எடப்பாடி பழனிசாமி.
கொள்கையற்ற ஒரு இளைஞர் கூட்டம் தற்போது உருவாகியுள்ளது. அவர்களை கொள்கைமயப்படுத்தும் பொறுப்பு எல்லோரையும் விட நமக்கு உள்ளது" என்று பேசினார்.
விழாவில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர் சிவசங்கர், சுப.வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன் மற்றும் பெரியார் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.