மருத்துவர் பற்றாக்குறையை போக்க அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை: ஓபிஎஸ்
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் பற்றாக்குறை குறித்து நானும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கவில்லை” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவர், மருந்து, மருத்துவத்திற்கான மருத்துவமனையிலும் இருந்தால்தான் மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்ற நிலையில், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை நிலவி வருவதும், இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
அண்மையில் கடலூர் மாவட்டம், மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்கிற விவசாயி, விவசாய நிலத்தில் உரம் தெளித்துக் கொண்டிருந்தபோது அவரை விஷப் பாம்பு கடித்துவிட்டதாகவும், உடனடியாக அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்தச் சமயத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் கூட அங்கு இல்லை என்றும், சிகிச்சைக்காக மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மருத்துவர் வராத சூழ்நிலையில் அவர் இறந்துவிட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதற்கேற்ப, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவரே இல்லை என்ற நிலைமை தான் நிலவுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய மருத்துவர்களை நியமிக்காததும், காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாததும் தான் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் பற்றாக்குறை குறித்து நானும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை திமுக அரசு எடுக்கவில்லை. விவசாயி செந்தில் அவர்களின் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமும், மெத்தனப்போக்கும் தான் காரணம்.
மேற்படி விவசாயியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க முதல்வர் உத்தரவிட்டு இருந்தாலும், இந்த இழப்பீடு உரிய இழப்பீடாகாது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இருந்திருந்தால் விவசாயியின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு இருக்கும். மருத்துவமனையில் மருத்துவர் இல்லாதது அரசினுடைய நிர்வாகத் திறமையின்மை, இந்த உயிரிழப்பு அரசின் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்ட ஒன்று. இதன்மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மக்கள் கெடுவாழ்வுத் துறையாக மாறியுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
திமுக அரசின் அலட்சியப் போக்கால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், இழப்பீட்டை பத்து மடங்கு உயர்த்தித் தருவதோடு, மேற்படி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததற்கு காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.