ஆந்திராவில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் வேலூரில் கைது
ஆந்திராவில் கொலை வழக்கு ஒன்றில் அந்த மாநில காவல் துறையால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவரை, காட்பாடி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி மாவட்டத்தில் கனகபள்ளி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக, குற்ற எண் 112/2025-ல், BNS பிரிவு 103(1) மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகால் நாதன் ரெட்டி (34) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். ஆகையால், ஆந்திரா காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரகால் நாதன் ரெட்டி, திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் (Tirupati Intercity Express வண்டி எண் - 16853) பயணிகள் ரயிலில் தப்பிச் செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், ஆந்திரா காவல் துறையினரும் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு குற்றவாளி என சந்தேகிக்கப்படும் பிரகால் நாதன் ரெட்டி குறித்த தகவலை பகிர்ந்தனர். அந்த தகவல் கிடைத்தவுடன், திருப்பதி இன்டர்சிட்டி ரயில், காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் அதற்குள் ஏறி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார், தீவிர சோதனை நடத்தினர். அப்போது, காட்பாடி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்த பிரகால் நாதன் ரெட்டியை சுற்றி வளைத்த போலீசார், அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, பிடிபட்ட பிரகால்நாதன் ரெட்டியை காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் தான் ஆந்திராவில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, ஆந்திர மாநிலம் கனகபள்ளி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசாரிடம், பிரகால் நாதன் ரெட்டியை பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்நிலையில், ரயிலில் தப்ப முயன்ற கொலைக் குற்றவாளியை சாமர்த்தியமாக பிடித்த காட்பாடி ரயில்வே போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.