நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை பெறாத இளைஞர்: அலட்சியத்தால் காய்ச்சல் வந்து மரணம்

நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை பெறாத இளைஞர்: அலட்சியத்தால் காய்ச்சல் வந்து மரணம்

அரக்கோணம் அருகே இளைஞர் ஒருவர், நாய்க்கடிக்கு உரிய நேரத்தில் முறையான சிகிச்சை பெறாததால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோசூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜம்புலிங்கம் என்பவரின் மகன் திவாகர் (19). இவர் 12 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, அதன் பின்னர் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திவாகரை ஒரு நாய் கடித்துள்ளது.

ஆனால் அந்த நேரத்தில் நாய்க்கடிக்கு தேவையான முழுமையான மருத்துவ சிகிச்சையை அவர் முறையாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு திடீரென திவாகருக்கு கடும் காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக குடும்பத்தினர் அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் திவாகருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை திவாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாய்க்கடிக்கு உரிய காலத்தில் முழுமையான தடுப்பூசி மற்றும் சிகிச்சை பெறாததே அவரது மரணத்திற்கு முக்கிய காரணம் என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாய்க்கடியால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாய்கடி போன்ற சம்பவங்களை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக அரசு மருத்துவமனைகளில் முழுமையான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நாய்க்கடி சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. சாலையில் செல்லும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்கும் சம்பவங்கள் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. இதனால் நாய்க்கடியால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் கணிசமாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு நாய்க்கடியால் 43 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 25-க்கும் மேற்படோர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலுமே தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தெருநாய்களுக்கு கருத்தடை செய்தல், ரேபிஸ் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.