மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.60 லட்சம் நிதி - தமிழ்நாடு அரசு நடவடிக்கை
மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் மருத்துவ செலவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காஞ்சிபுரம் தாயார் குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார் - சசிகலா தம்பதி. இவர்களது 7 வயது மகள், உடலுறுப்பு வளர்ச்சியில் மாறுபாடு ஏற்பட்டு அரிய வகை மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த குறைபாட்டால் மூச்சு விடுவதற்கும், உடல் வளர்ச்சிக்கும் பெரும் சிரமத்தை சந்திக்கும் சிறுமி, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த பிரச்சனையை சரி செய்ய சிறுமிக்கு வாரம் ஒருமுறை ரூ.2 லட்சம் மதிப்பிலான ஊசி, மருந்து என 30 வாரங்களுக்கு செலுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கடந்த ஆண்டு சிறுமியின் சிகிச்சைக்கு மட்டும் சுமார் ரூ.65 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இந்த சிகிச்சைக்கு பிறகு சீராக இருந்த சிறுமிக்கு மீண்டும் மரபணு தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், சிறுமிக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டதால் அவர் பள்ளிக்கு செல்வதை தவிர்த்துள்ளார்.
எனவே, தங்கள் மகளின் மருத்துவ செலவுக்கு தமிழ்நாடு அரசும், மத்திய சுகாதாரத் துறையும் உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, கடந்த 16-ஆம் தேதி கண்ணீர் மல்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இது குறித்து கேட்டறிந்த காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார்.
இதன் அடிப்படையில், சிறுமியின் உயிர்காக்கும் சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து, அவர்களின் போக்குவரத்து செலவிற்காக ரூ.10 ஆயிரம் பணத்தை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம். சுகுமார் சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். இதனை பெற்ற சிறுமியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இன்று முதல் சிறுமிக்கு மீண்டும் தடுப்பூசி மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடங்க உள்ளன. இதில், அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பள்ளிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவியதை அடுத்து, சிறுமியின் நிலை அறிந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். தற்போது வரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக சுமார் ரூ.2.5 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதில், சமூக ஆர்வலரும், காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான அருண்குமார், பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து, சிறுமி குணமடைந்த பின்னர் தனது பாரதிதாசன் பள்ளியில் கட்டணமில்லா கல்வியைப் பயிலலாம் என அவர் தெரிவித்துள்ளார்.