அமைச்சர் நேருவின் தம்பியான ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ஆம் தேதி, திருச்சி தில்லை நகரில் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது காரில் கடத்தி செல்லப்பட்டு, திருவளர்ச்சோலை எனும் இடத்தில் வைத்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கைகள் பின்னால் கட்டப்பட்டு, உடல் முழுதும் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டு ரண கொடூரமாக அவரை கொலை செய்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இக்கொலை வழக்கில், 13 ஆண்டுகள் ஆன போதிலும், கொலையாளிகள் யார்; திருச்சியில் மிக முக்கிய புள்ளியாக ஆதிக்கம் செலுத்திவந்த ராமஜெயம் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து தற்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. முக்கியமாக டார்கெட் வைக்கப்பட்டிருந்த 12 ரெளடிகளிடம் விசாரணை நடத்தியும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. உண்மை கண்டறியும் சோதனையும் பலனளிக்கவில்லை.
இதற்கிடையே ராமஜெயம் கொலை வழக்கிற்கு, டி.ஐ.ஜி வருண்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு வழக்கை விரைவாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கொலை தொடர்பாக விசாரிக்க மார்க் செய்யப்பட்ட முக்கிய இடங்களில் ஒன்றான திருச்சி பாலக்கரை அருகே செயல்படும், காவேரி தியேட்டரிலும் தீவிர விசாரணை மேற்கொண்டார். தியேட்டர் உரிமையாளர் மோகன் மற்றும் தியேட்டரில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார். இந்த தியேட்டர் ராமஜெயம் கொலை நடந்த 2012 ஆம் ஆண்டில், சசிகலா உறவினர் திவாகருக்கு சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு திரையரங்கை வேறு சிலருக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர்.
சில ஆண்டுகள் செயல்படாமல் இருந்த அந்த திரையரங்கு புனரமைப்பு செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டுக்கு பின்பு மீண்டும் செயல்படத் தொடங்கியது. ராமஜெயம் கொலை தொடர்பாக திரையரங்கில் வைத்து ஏதும் சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.