428 காலாவதி சட்டங்களை நீக்க பேரவையில் மசோதா தாக்கல்
தமிழகத்தில் காலாவதியான, தேவையற்ற 428 சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, 2 மசோதாக்களை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார். ‘தமிழகத்தில் காலாவதியான, தேவையற்ற சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்களை நீக்குமாறு தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துபேசி, பழமையான, வழக்கத்தில் இல்லாத சட்டங்களை நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது’ என்று மசோதாவுக்கான நோக்க காரண உரையில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு கிராம நீதிமன்றங்கள் சட்டம்-1888, தமிழ்நாடு துறைமுகப் பொறுப்பு கழகம் திருத்தச் சட்டம்-1919, தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டுச் சட்டம்-1940 உள்ளிட்ட 428 சட்டங்கள், திருத்தச் சட்டங்களை நீக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரவைக் கூட்டம் நிறைவடையும் நாளில் இந்தமசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு குறிப்பிட்டார்.