தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.2,113 கோடி விடுவிக்கவில்லை: பேரவையில் முதல்வர் விமர்சனம்

தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.2,113 கோடி விடுவிக்கவில்லை: பேரவையில் முதல்வர் விமர்சனம்

தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தில் தமிழகத்​துக்குத் தரவேண்டிய ரூ.2,113 கோடியை மத்​திய அரசு இன்​னும் விடுவிக்​க​வில்லை என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்டா​லின் குற்​றம்​சாட்​டி​னார்.

மத்​திய அரசின் புதிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் அரசினர் தனித் தீர்​மானத்தை ​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் கொண்டு வந்​தார். அப்போது தீர்​மானத்தை முன்​மொழிந்து அவர் பேசி​ய​தாவது: மத்​திய, மாநில அரசுகளின் திட்​டங்​கள் தமிழகத்​தில் பாகு​பாடின்றி செயல்​படுத்​தப்​படு​கின்​றன.

ஆனால், எந்தத் திட்​ட​மா​னாலும், பணிக்கு ஏற்ப உரியநிதியை விடுவிக்​காமல் தாமதம் செய்​து, மத்​திய அரசு மாற்​றாந்​தாய் மனப்​பான்​மை​யுடன் செயல்​பட்டு வரு​கிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்​டத்​தி​லும் முந்​தைய ஆண்​டு​களை ஒப்​பிடும்​போது, 2025-26-ல் தொழிலா​ளர் மதிப்​பீடு மற்​றும் நிதி ஒதுக்​கீடு குறை​வாகவே வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த திட்​டத்​தில் ரூ.1,026 கோடி ஊதி​யத்துக்​கான தொகை​யும், ரூ.1,087 கோடி பொருட்​கூறுக்​கான தொகை​யும் இது​வரை விடுவிக்​கப்​பட​வில்​லை.

அதே​போல, வீடு​களுக்கு குடிநீர் இணைப்பு வழங்​கும் உயிர்​நீர் திட்​டத்​தில் ரூ.3,112 கோடி, பிரதமர் கிராமச் சாலை திட்​டத்​தில் ரூ.516 கோடி இன்​னும் தரப்​பட​வில்​லை. இதனால், தமிழகத்​தின் கிராமப் பகு​தி​களில் வாழும் எளிய மக்​கள், விவ​சா​யிகள் பாதிக்​கப்​படு​கின்​றனர். தற்​போது கிராமப்​புற மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாதிக்​கும் வகை​யில் மாற்​றப்​பட்​டுள்ள விபி-ஜி ராம் ஜி எனும் மத்​திய அரசின் புதிய திட்​டத்தை நாங்கள் எதிர்க்​கிறோம்.

ஏற்​கெனவே இருந்த 100 நாள் வேலை திட்​டத்​தால் தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் 74 லட்​சம் தொழிலா​ளர்​கள் பயன்​பெற்று வந்​தனர். இதில் 85 சதவீதத்​துக்​கும் அதி​க​மானவர்​கள் பெண்​கள் ஆவர். ஊரகவேலை உறுதித் திட்​டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்​டும். வேலைக்​கான வழி​முறையை மாநில அரசே வகுத்​துக் கொள்ள வழி​செய்ய வேண்​டும்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்​கும் கடிதம் எழு​தி​யுள்​ளேன். இதுபற்றி பிரதமர் மோடி​யிடம் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேச வேண்​டும். பேசு​வார் என நம்​பு​கிறேன். இவ்​வாறு தனித்தீர்மானம் மீது முதல்​வர் ஸ்டாலின் பேரவையில் பேசினார்.

இதைத் தொடர்ந்​து, உறுப்​பினர்​கள் செல்வப்​பெருந்​தகை (காங்​கிரஸ்), பாபு (விசிக), சின்​னப்பா (மதி​முக),ஜி.கே.மணி (பாமக), ஈஸ்​வரன் (கொமதேக), மாரி​முத்து (இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி), சின்​னத்துரை (மார்க்​சிஸ்ட் கட்சி), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் தீர்மானத்தை வரவேற்​று உரையாற்றினர்.

அதி​முக சார்​பில் எதிர்க்​கட்சித் துணைத் தலை​வர் ஆர்​.பி.உதயகு​மார் பேசும்​போது, “20 ஆண்​டு​களுக்கு முன்பு கொண்டு வரப்​பட்ட 100 நாள் வேலைத் திட்​டம் காலத்​துக்​கேற்ப மாற்​றப்​பட்​டுள்​ளது. வேலை நாட்​கள் எண்​ணிக்​கை​யும் 125 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஆனால், இத்​திட்​டம் முழு​வதும் ரத்து செய்​யப்​படு​வது போன்ற பிம்​பம் உரு​வாக்​கப்​படு​கிறது. தனிப்​பட்​ட அரசி​யல்​ காரணங்​களால்​ இந்​த தீர்​மானம்​ கொண்​டு வரப்​பட்​டுள்​ளது” என்​றார்​.