தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு புதிதாக 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வந்துள்ளது.
இந்திய தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இழுவை படகானது 60 டன் திறன் மற்றும் 498 டன் மொத்த உட்புற கன அளவை கொண்டுள்ளது. இந்த இழுவை படகானது கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டது.
ஒழுங்குகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்ட இந்த இழுவை படகினை, கப்பல் துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் ‘சுயசார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா‘ முயற்சிகளுடன் இணைக்கும் விதமாக கடல்சார் உட்கட்டமைப்பில் இந்தியாவின் தன்னிறைவு உறுதியை வலுப்படுத்துகிறது.
இது எளிமையான மற்றும் பாதுகாப்பான கப்பல் இயக்கத்தை உறுதி செய்வதாக வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், துறைமுகத்தின் நவீனத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கான உறுதியைக் காட்டுகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்த இழுவை படகின் சேர்க்கையால் துறைமுகத்தின் செயல்திறன் பெரிதும் மேம்படும். பெரிய கப்பல்களின் பாதுகாப்பான கையாளும் திறனை (நிறுத்தம் மற்றும் புறப்பாடு) உறுதி செய்யப்பட்டு துறைமுகத்தில் கப்பல்கள் வந்து செல்லும் நேரம் வெகுவாக குறையும். மேலும், இது துறைமுகத்தின் திறனை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் கடல் சார்ந்த வளர்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.