வாட்ஸ்அப் மூலம் ரூ. 4.15 கோடி மோசடி: நெல்லையைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது!
வாட்ஸ்அப் மூலம் குற்றவியல் அதிகாரி எனக்கூறி ரூ. 4.15 கோடி மோசடி செய்த வழக்கில் மோசடி கும்பலுக்கு உதவிய நெல்லை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸன் (வயது 73) என்பவருக்கு கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி வாட்ஸ்அப்பில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை மும்பை குற்றவியல் துறையின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, ஸ்ரீவத்ஸன் பயன்படுத்தும் சிம்கார்டு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார். மேலும், அமலாக்கத்துறை, சிபிஐ, இன்டர்போல் மற்றும் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கைகள் என சில ஆவணங்களைக் காட்டி டிஜிட்டல் அரஸ்ட் செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
கைது செய்யாமல் இருக்க, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விதிமுறைப்படி வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்யவேண்டும் எனக் கூறியதோடு, பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறும், அவை திருப்பி அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய ஸ்ரீவத்ஸனும் கடந்த 25.09.2025 முதல் 05.10.2025-ம் தேதி வரை, மொத்தம் ரூ. 4.15 கோடியை பல்வேறு கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். அதன்பிறகு அந்த அதிகாரியை தொடர்புகொள்ள முயன்றபோது செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஸ்ரீவத்ஸன், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில், மத்தியக் குற்றப் பிரிவின் கணினிசார் குற்றப்பிரிவில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதோடு, தனிப்படை அமைத்தும் குற்றவாளியை தேடி வந்தனர். விசாரணையின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷ்குமார் (வயது 23) என்பவர் உள்ளூர் காவல்துறை உதவியோடு கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 2 மொபைல் போன்கள், ஆதார் அட்டை, ஏடிஎம் அட்டைகள் மற்றும் மோசடி நிதியைப் பயன்படுத்திய பல வங்கி பாஸ்புக்குகள் உட்படப் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அரசு அதிகாரிகளைப் போன்று ஆள் மாறாட்டம் செய்து பலரை ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து, உ.பி, ஜான்சியில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ட்ரான்சிட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் மனிஷ்குமார் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஸ்ரீவத்ஸன் அனுப்பிய பண பரிவர்த்தனைகளில் சுமார் ரூ.10 லட்சம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக் கணக்கிற்கு சென்றதும், அந்த பணம் ரொக்கமாக எடுக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்து இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார்(35) என்பவரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன், 2 காசோலை புத்தகங்கள் மற்றும் மோசடி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செல்வகுமாரை சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை செய்ததில், சைபர் மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்து அதில் கமிஷன் பெற்றுவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.