குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இன்று, நாளை இயக்கம்

கர்நாடகாவின் மைசூருக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இரண்டு நாட்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (அக்டோபர் 2, 2025) இரவு 12 மணியளவில் நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டினத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
ரயில் எண் (06106): இந்த ரயில் திருச்செந்தூரில் இருந்து இன்று (அக். 2) இரவு 9 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு இரவு 10.30 மணிக்குச் சென்றடைகிறது.
ரயில் எண் (06105): மறுமார்க்கத்தில், இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 12.30 மணிக்குத் திருச்செந்தூரை சென்றடைகிறது.
இந்த ரயில்களில் 10 முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்டுன்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து, விதவிதமான வேடங்கள் தரித்து, காணிக்கைகள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.