முல்லை பெரியாறில் புதிய அணை கோரி மனு: தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ்

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டக்கோரி ‘சேவ் கேரளா பிரிகேட்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், கே.வினோத் சந்திரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி அமர்விடம் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி வாதிடும் போது இது 130 ஆண்டுகள் பழமையானது என்பதால், அணையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் சுமார் ஒரு கோடி மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றார். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தற்போதுள்ள அணையை பலப்படுத்துங்கள் என்று உத்தரவிடலாம். இருமாநிலங்கள் தொடர்புடையமுல்லை பெரியாறு அணையால் யாருக்கு என்ன பிரச்சினை என்பதை மனுதாரர்தெளிவாக தெரிவிக்கவில்லை.
பழைய அணைக்கு பதிலாக புதிதாக அணை கட்டினால், தமிழக அரசின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும், புதிய அணை கட்டக் கோருவது தொடர்பாக மத்திய அரசு, தமிழக, கேரள அரசுகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பதில்அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.