திருப்பூர் குப்பை பிரச்சனை: மாநகராட்சியில் குடியேற முயன்ற 200 பேர் குண்டுகட்டாக கைது!
குப்பை பிரச்சனை காரணமாக மாநகராட்சி அலுவலகத்திற்குள் பாய் தலையணைகளுடன் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் பல டன் குப்பைகள் அந்தந்த பகுதியில் உள்ள பாறை குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. குறிப்பாக முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறை குழிகளில் அதிக அளவில் கொட்டப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்பொழுது அங்கு குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது குப்பைகளை கொட்டுவதற்கு வேறு சில இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அங்கு உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தற்பொழுது குப்பைகளை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் மீண்டும் முதலிபாளையம் பாறை குழிகளுக்குள் குப்பைகள் கொட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ஏற்கனவே குப்பைகள் கொட்டப்பட்டதால் நிலத்தடி நீர் மிகவும் மாசுபட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் கடும் துர்நாற்றத்தால் குடி இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மீண்டும் முதலிபாளையம் பாறை குழிகளில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் கெட்டுப்போன குடிநீருடன் பாய் மற்றும் தலையணைகள் எடுத்து வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தனர். தடையை மீறி முதலிபாளையம் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்குள் பாய் தலையணைகளுடன் உள்ளே செல்ல முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் பெண்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பே பாய் தலையணையை கீழே விரித்து படுத்துக் கொண்டனர். உடனடியாக அவர்களை பெண் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சிலர் மாநகராட்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்ய முயற்சித்தபோது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். குப்பை பிரச்சனை காரணமாக மாநகராட்சி அலுவலகத்திற்குள் பாய் தலையணைகளுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.