வீடு- வீடாக சோதனை செய்வோம்... ஜெயக்குமார் உறுதி

வீடு- வீடாக சோதனை செய்வோம்... ஜெயக்குமார் உறுதி

எஸ்.ஐ.ஆர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, “உயிருடன் இருக்கும் யாரின் வாக்கும் தவறிவிடக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளோம். அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று சோதனை செய்யப்போகிறோம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியது.
அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதலில் மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 16 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சென்னை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பாக மொத்தம் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 14,25,018 பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் மட்டும் 35.58% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடம் பெயர்ந்தவர்கள் 12,22,164 நபர்களும், 1,56,555 நபர்கள் இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியலை பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இடம் பெயர்ந்தவர்கள் 12,22,164 நபர்களும், 1,56,555 நபர்கள் இறந்தவர்களின் பெயர்களும், முகவரியில் இல்லாதவர்கள் 27,328, இரட்டை பதிவு 18,772 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களை பொறுத்தவரை மாநகராட்சி இறப்புச் சான்றிதழைக் கொண்டு சரிபார்த்துவிடும் அதில் பிரச்சனை இல்லை. ஆனால், இடம் பெயர்ந்தவர்கள் பக்கத்து தொகுதிக்கோ, அல்லது வேறு மாவட்டத்திற்கோ சென்றிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு பூத்களில் பெயர் இருக்கிறது. அதனை மாற்றி அனைவருக்கும் ஒரே பூத்தில் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உயிருடன் இருக்கும் யாரின் வாக்கும் தவறிவிடக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளோம்.
இறந்தவர்களின் பெயர்களில் வாக்குகள் பதிவாகிறது என சொல்லி வருகிறோம். தற்போது எஸ்.ஐ.ஆர்.-ல் 1,56,555 நபர்கள் இறந்தவர்கள் என சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 20 வருடமாக உயிருடன் இருந்து தற்போதுதான் மரணித்துள்ளனர். இது இறுதி பட்டியல் கிடையாது. அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று சோதனை செய்யப்போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.