புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தகவல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடப்பு 2025-26-ம் நிதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயன்கள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.
இந்த விவாதத்துக்கு இடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த 2023-ல் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெண்களின் பொருளாதார விடுதலைக்கு துணை நிற்கும் இந்த திட்டம் மூலம் சுமார் 1.14 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. கடந்த 26 மாதங்களில் ஒவ்வொருவருக்கும் ரூ.26 ஆயிரம் வீதம் ஒட்டுமொத்தமாக ரூ.30 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் அதிக பெண்கள் பயனடைய வேண்டும் என்று, சில விதிகளை முதல்வர் தளர்த்தியுள்ளார். உதாரணமாக, அரசு மானியத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் விதிகளை பூர்த்தி செய்யும் பெண்களுக்கும் உரிமைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
இதற்கிடையே, அரசு சேவைகள் மக்களைத் தேடி சென்றடையும் நோக்கிலான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக, கிராமப்புறங்களில் 15 துறைகளின் வாயிலாக 45 சேவைகளும், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான மனுக்களும் ஏற்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதற்காக, நவம்பர் 15 வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அக்.10 வரை 9,055 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி இந்த முகாம்களில் இதுவரை 28 லட்சம் பெண்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நவம்பர் 14-ம் தேதி முடிவடைய உள்ளன. இதற்கிடையே, உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் களஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணி நவம்பர் 30-ம் தேதிக்குள் முடிவடையும். முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதல்வர் முடிவெடுத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.