கார் மோதி விபத்து: பாதயாத்திரையாக சென்ற 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
பெரம்பலூர் சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிந்து வழிபடுகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து பாத யாத்திரையாக சென்றவர்கள், பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி கடலூர் தோழர் குடிக்காடு பகுதியைச் சேர்ந்த மலர்கொடி (35), விஜயலட்சுமி (40), சசிகலா (47), மற்றும் ஆத்தூர் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த சித்ரா (40) ஆகியோர் சம்பவ் இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.