ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிப்ரவரி 2ஆம் தேதி மாலை முதல் தகுதி சான்றிதழ் பெறலாம்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிப்ரவரி 2ஆம் தேதி மாலை முதல் தகுதி சான்றிதழ் பெறலாம்

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்று மற்றும் இரண்டின் தேர்வு முடிவுகளை குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் செயல்பட்டு வருகிற அரசு மற்றும் பிற துறை பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்ச்சி மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவர். அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்கு 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2025-க்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 தேர்வானது நவம்பர் 15ஆம் தேதி 367 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வை 92,412 பேர் எழுதினர். அதேபோல் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II, அடுத்த நாளான நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை 3,31,923 பேர் எழுதினர். இதன்படி தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளை மொத்தம் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.

அதற்கும் முன்னதாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. தகுதித்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்வு இது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து ஜனவரி 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையின் குறைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் தகுதிபெற்ற தேர்வர்களுக்கு பிப்ரவரி 2 தேதி மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in- தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் வாரியாக வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளில், தமிழ் பாடம் உட்பட அனைத்து பாடங்களிலும் ஆசிரியர்கள் அதிகளவில் பெயிலாகி இருப்பது தேர்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.