கரூர் சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் - நடிகை அம்பிகா பேட்டி!

கரூர் சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் - நடிகை அம்பிகா பேட்டி!

தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரை கூட்ட நெரிசல் சம்பவத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று நடிகை அம்பிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நடிகை அம்பிகா இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் சுங்ககேட், தான்தோன்றிமலை பகுதிகளில் உள்ளவர்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தவெக கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதிக்கும் அவர் சென்றார். அங்கு இருந்த காயம் அடைந்தவர்கள் சிலரையும் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "நான் எந்த அரசியல் கட்சி சார்பிலும் பிரதிநிதியாக இங்கு வரவில்லை. தமிழ் உறவுகள் பலியாகி உள்ளனர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவே வந்துள்ளேன். யாரையும் குறை சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. தொலைக்காட்சி மூலமாக விஜய் பேசுவதை கேட்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் கூறியும், நேரில் தான் விஜய் பேச்சை கேட்க வேண்டும் என்று சென்றது தவறு தான், நடந்து முடிந்தது குறித்து இப்போது பேசி எதுவும் இனி மாறப் போவதில்லை.

குழந்தைகளை அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இனி இது போன்ற சம்பவம் தமிழகத்தில் எங்கும் நடைபெறக் கூடாது. வீட்டில் உள்ளவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். நான் யாருக்கும் சாதகமாக பேச இங்கு வரவில்லை. யாருக்கும் எதிராகவும் நான் பேசவில்லை . கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளை நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. ஆறுதல் தெரிவிக்க நான் வருகை புரிந்ததை எந்த சாயமும் பூசி விட வேண்டாம்.

சினிமாவில் நடித்தவர்கள் வருகிறார்கள். அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். கரூரில் நடந்த சம்பவத்தை இப்படி செய்திருந்தால் தடுத்திருக்கலாம் என கூறுவதை தவிர்த்து விட்டு, இனியாவது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று நடிகை அம்பிகா கூறினார்.