கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம், வர்த்தக வளாகம்; டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம், வர்த்தக வளாகம்; டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் வர்த்தக வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கடந்த மக்களவை தேர்தலின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். இதன்படி கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒண்டிப்புதூர் பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.72 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இதனையடுத்து கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. பின்னர் கோவையில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுமானப் பணிகளுக்கு, இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது.

இந்த நிலையில் கோவையில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. பொதுமக்கள் - தனியார் பங்களிப்பு முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 20.72 ஏக்கரில் மைதானமும், 10 ஏக்கரில் வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் உணவகம், ஸ்போர்ட்ஸ் பார், உயர்தர இருக்கை வசதி, உட்புற பயிற்சி அரங்கம், ஃபீல்டிங் மண்டலம், வீரர்கள் ஓய்வறை, விரிவுரை அரங்குகள், கிளப் ஹவுஸ், விஐபி அறைகள், கார்ப்பரேட் அறைகள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவை இடம்பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு https://tidco.com என்ற இணைய முகவரியில் அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க டெண்டர் கோரியிருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டெண்டர் அறிவிப்பு குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகையில், "கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க டெண்டர் கோரி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட வேண்டும்.

இந்த ஸ்டேடியம் விரைவில் அமையும் பட்சத்தில் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது கோவை நகரம் மேலும் தொழில் வளர்ச்சியில் பெருகும்.'' என்று கூறினர்.