தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள்! ஆளுநர் ஆர் என் ரவி பாராட்டு!

தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள்! ஆளுநர் ஆர் என் ரவி பாராட்டு!

தமிழ்நாடு தேசிய வளர்ச்சிக்கும் முக்கியமான பங்காற்றி வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 'தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு' மற்றும் '2025 தரவரிசையில்' தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற நிறுவனங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடு முழுவதும் இருக்கும் கடுமையான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் டாப் 20 இடங்களில் வந்துள்ளன. இது பாராட்டுக்குரியது. நீங்கள் தமிழ்நாட்டை பெருமை படுத்தியுள்ளீர்கள். சில நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட துறையில் அதிக அனுபவம் இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனித்துவம் இருக்கிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்வது மற்றும் பகிர்வது மூலம் அறிவும், தரமும் பெருகும்.

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு

தமிழ்நாடு சிறந்த கல்வி நிறுவனங்களை கொண்டுள்ளது. இதன் மூலம் சமூக வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். 2047 ஆம் ஆண்டு இந்தியா முன்னணி நாடாக மாற வேண்டும். அதற்கு கல்வி மிக பெரிய ஊன்றுகோலாக இருக்க வேண்டும். நாம் இந்த இலக்கை அடைய நமக்கு முற்போக்கு சிந்தனை, செயலாக்கம் வேண்டும். உலகளவில் நாம் கல்வியில் முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். இன்னும் வேகமாக முன்னேற வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயங்க வேண்டாம். ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அழைத்து, பகிர்ந்து, கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு (GER) 50 சதவீதத்தை கடந்துள்ளது. தமிழ்நாடு, மாநில வளர்ச்சியில் மட்டுமல்ல தேசிய வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.

’தேசிய ஆசிரியர் விருது’

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இரண்டு நாட்களுக்கு முன், இதே மண்டபத்தில் எஸ்.என்.ஏ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் சங்கர் சியாப்புக்கு ’தேசிய ஆசிரியர் விருது’ வழங்கப்பட்டது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக அவர் கல்வி முறைகளை புதுப்பித்து தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் முறைகளை மேம்படுத்தும் முயற்சியில் அயராமல் உழைத்தவர். அவரை போல பல ஆசிரியர்கள் மாணவர்களின் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும்” என்றார்.