டெல்லி குண்டுவெடிப்பு: அல் ஃபலா பல்கலைக்கழக தலைவருக்கு டெல்லி காவல்துறை சம்மன்

டெல்லி குண்டுவெடிப்பு: அல் ஃபலா பல்கலைக்கழக தலைவருக்கு டெல்லி காவல்துறை சம்மன்

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில், அல் ஃபலா பல்கலைக்கழக தலைவருக்கு டெல்லி காவல் துறை 2 சம்மன்களை அனுப்பியுள்ளது.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்பாக, காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கொண்ட குழு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை சந்தேகிக்கப்பட்டது. இந்த விபத்தில் காரில் வெடிகுண்டை வைத்து வெடிக்க செய்து தானும் இறந்து போன மருத்துவர் உமர் நபி மற்றும் அவருடைய கூட்டாளிகளான மருத்துவர்கள் முசம்மில் அகமது கேனாய், அதீல் ராதர், ஷாஹித் ஷாஹீன் ஆகியோர் அடங்குவர்.

இது தற்கொலைப் படை தாக்குதல் என்று என்ஐஏ உறுதி செய்தாலும், இந்த தாக்குதலுக்கு உதவியாக இருந்த காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலியை டெல்லியில் வைத்து கைது செய்தனர். மேலும் காரில் வெடிகுண்டை வெடிக்கச் செய்த உமர் நபி ஓட்டிவந்த காரை வாங்க உதவிய டீலரையும் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழக தலைவருக்கு டெல்லி காவல்துறை 2 சம்மன்களை அனுப்பி இருக்கிறது. பயங்கரவாதிகள் இருந்ததாக அறியப்படுகிற ஃபரிதாபாத் மற்றும் அங்கு செயல்பட்டு வருகிற அல் ஃபலா பல்கலைக்கழகத்திற்கும், குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் பல்கலைக்கழக தலைவரான ஜாவேத் அகமது சித்திக்கை டெல்லி போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முன்னதாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) ஆய்வு மேற்கொண்டதில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மாணவர்கள் பயின்றதாக பல்கலைக்கழகத்திற்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. UGC மற்றும் NAAC ஆகியவை பல்கலைக்கழக அங்கீகார கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்ததாகவும், அதில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டதாலேயே அது குறித்த அறிக்கையை சட்ட அமலாக்க துறையிடம் சமர்ப்பித்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.