வடகிழக்கு பருவமழை... திருவள்ளூரில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் என்ன? ஆட்சியர் விளக்கம்!
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம்.பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.பிரதாப் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார்.
அப்போது அவர், ''மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் மேம்படுத்தப்பட்டு வருவாய்த் துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறை அலுவலர்கள் 24×7 பணிபுரிந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 39, மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 42 உட்பட மொத்தம் 133 பகுதிகள் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு மேற்படி பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல குழுக்கள (Inter Departmental Zonal Team-42 Backup Team -22) ஆக மொத்தம் 64 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
திருவள்ளுர் மாவட்டத்தில் 4,480 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு (First Responders) பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 தன்னார்வலர்களுக்கு ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் (Cyclone Shelter) வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், (Multipurpose Evacuation Shelter) திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர் 1 மற்றும் எளாவூர் 11 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. மேலும், 669 தற்காலிக தங்குமிடங்களும் (Temporary Relief Shelters) தயார் நிலையில் உள்ளன. 137 Rapid Response Team, 61 Chlorination Team மற்றும் 66 Vector Control Team ஆகிய மருத்துவ குழுக்கள் மற்றும் 76 Ambulances தயார் நிலையில் உள்ளன.
மாவட்டத்தில் 65,170 மணல் மூட்டைகள், 5,682 சவுக்கு கம்பங்கள், 34 பொக்லைன், 95 ஜேசிபி, 169 மரம் அறுக்கும் கருவி, 1,655 கயிறுகள், 38 படகுகள், 93 மோட்டார் படகுகள், 15 இரப்பர் படகுகள், 180 நீர் இறைக்கும் மோட்டார், 9 சூப்பர் சக்கர், 179 ஜெனரேடர்கள், 30 தண்ணீர் லாரிகள், 63 சின்டெக்ஸ், 94 குப்பை லாரிகள், 7 சிறிய வாகனங்கள், 149 பாகிங் இயந்திரங்கள், 141.46 ப்ளீச்சிங் பவுடர் (MTS). 17.51 குளோரின் மாத்திரைகள் (MTs), 84 தார்ப்பாய்கள், 584 டார்ச் லைட்கள், 2190 மின் கம்பங்கள், 210 மின் கம்பிகள் மற்றும் மின்மாற்றி 15 ஆகியவை தயாராக உள்ளன.
திருவள்ளுர் மாவட்டத்தில் 497.28 கி.மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுபாலங்கள் 4,852 மற்றும் பாலங்கள் 83 சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஆரணியாறு வடிநில கோட்டம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய்கள், நீர் வெளியேறும் கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் உள்ள நீர் வரத்து தங்கு தடையின்றி வெளியேற கால்வாய்களில் உள்ள அடைப்புகள் நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், பால், பிரட், பிஸ்கட்ஸ் போன்றவை வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அரசினால் அறிவிக்கப்படும் வெள்ளம் மற்றும் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை செய்திகளை அறிந்து அதன்படி செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில் பொது மக்கள் மழை, வெள்ளம் தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வருகின்றது. மேலும், கட்டுப்பாட்டு அறை 044-27664177, 044-27666746-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், மேலும், வாட்ஸ் ஆப் எண். 9444317862 / 9498901077 ஆகியவை திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்'' என மாவட்ட ஆட்சியர் கூறினார்.