இறந்த பின்பும் இருவருக்கு பார்வை அளித்த மதுரை பெண்மணி!

இறந்த பின்பும் இருவருக்கு பார்வை அளித்த மதுரை பெண்மணி!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 43 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் இரண்டு நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டது.

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரது மனைவி ஹரிதேவி (43), கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில் திருப்பரங்குன்றம் கோயில் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே ஹார்விபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தலைக்காயத்துக்கான தீவிர சிகிச்சைப் சிறப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 3 ஆம் தேதி இரவு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவரது கருவிழிகள் தானமாக பெறப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், "மூளைச்சாவு அடைந்த ஹரி தேவியின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். ஹரிதேவின் கணவர் ராஜகோபாலிடம் முறையான ஒப்புதல் பெற்று அவரது கருவிழிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டன. மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் இரண்டு நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.

மேலும் ஹரிதேவியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்வதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு அவரின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது' என்றார்.

'இறந்த ஹரிதேவியின் உடலில் கருவிழிகள் மட்டுமே தானம் பெறுவதற்கு உரியதாக இருந்தன. மற்ற உறுப்புகளை எடுக்க இயலவில்லை' எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.