வங்கியில் ஒரு கிலோ தங்க நகையை விட்டு சென்ற பெண் - வேளச்சேரியில் பரபரப்பு

வங்கியில் ஒரு கிலோ தங்க நகையை விட்டு சென்ற பெண் - வேளச்சேரியில் பரபரப்பு

வேளச்சேரியில் வங்கிக் கணக்கு தொடங்க பர்தா அணிந்து தனியார் வங்கிக்கு வந்த பெண் ஒரு கிலோ தங்கக் கட்டி, 256 கிராம் தங்க நகைகளை விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கிக் கிளைக்கு கடந்த 5 ஆம் தேதி பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் தன் பெயர் ஷர்மிளா பானு என்றும், தனது கணவரின் வங்கிக் கணக்கு இந்த வங்கியில் தான் உள்ளது, எனவே தனக்கும் ஒரு வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் என வங்கி ஊழியரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு வங்கி ஊழியர், மேலாளர் அரை மணி நேரத்தில் வந்து விடுவார் எனக் கூறி வங்கிக் கணக்கை துவங்க ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் ஆவணங்களை எடுத்து வரவில்லை, நான் சென்று எடுத்து வருகிறேன் என கூறி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வங்கிக்கு வந்த ஒருவர், அப்பெண் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் ஒரு பை ஒன்று இருப்பதை கண்டு வங்கி ஊழியர்களிடம் தெரிவித்தார்.

உடனடியாக வங்கியின் மேலாளர் அந்தப் பையை சோதனை செய்து பார்த்த போது, அதில் தங்கக் கட்டியும், நகைகளும் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து வங்கி மேலாளர், வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில், அவர்களும் வந்து பார்த்து விட்டு நகையின் தரத்தை பரிசோதித்துள்ளனர். அப்போது தங்கக் கட்டி 24 காரட் சுத்தத் தங்கம் எனவும், 256 கிராம் நகைகள் 22 காரட் தங்கம் என உறுதியானது.

நகைப் பையை விட்டுச் சென்று 4 நாட்கள் ஆகியும் உரிமை கோர அப்பெண் வராததால் வங்கி மேலாளர் அகமது கத்தாரி, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து நகையை விட்டுச் சென்ற பெண் யார் என விசாரித்து வருகின்றனர். மேலும் நகையின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதால் வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் வங்கியில் தங்கக் கட்டி மற்றும் தங்க நகைகளை விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 4 நாட்களாக உரிமை கோர வராததால் கடத்தல் தங்கமாக இருக்குமோ என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.