தீபாவளிக்கு சொந்த வாகனங்களில் செல்கிறீர்களா? ஜிஎஸ்டி வேண்டாம்... ஈசிஆர், ஓஎம்ஆர் ரூட்டை பிடிங்க!

தீபாவளிக்கு சொந்த வாகனங்களில் செல்கிறீர்களா? ஜிஎஸ்டி வேண்டாம்... ஈசிஆர், ஓஎம்ஆர் ரூட்டை பிடிங்க!

 தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சொந்த வாகனங்களில் செல்பவர்கள் ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து விட்டு கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை வழியாக செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் வரும் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் வசிப்பவர்கள், தங்கி படித்து வருபவர்கள், பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நெரிசல் இல்லாமல் செல்வதற்கு போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் செல்லும் பொதுமக்கள் பொதுவாக தங்கள் சொந்த வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து மூலம் ஜிஎஸ்டி சாலையை அதிகம் பயன்படுத்துவார்கள். இதனால் விடுமுறை நாளில் அதிகப்படியான வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் சென்று கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்படும்.

தாம்பரம் - கிளாம்பாக்கம் வழியில் கனரக வாகனங்களுக்கு தடை

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு ஏதுவாக ஜிஎஸ்டி சாலையில் கனரக வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்களில் தாம்பரம் - கிளாம்பாக்கம் வழியாக ஜிஎஸ்டி சாலையில் விழுப்புரம் வரை செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ''வரும் 17,18 ஆகிய தினங்களில் ஆவடி பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி வழியாக திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று அடையலாம்.

மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி ஜிஎஸ்டி சாலைகளுக்கு வரும் கனரக வாகனங்கள் மதுரவாயலில் திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக வண்டலூர் நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலை சென்று தங்களது இலக்கை அடையளாம். இந்த தடை உத்தரவு 17, 18 ஆகிய இரு தினங்களில் மதியம் இரண்டு மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகள் ஜிஎஸ்டி சாலையில் தங்களது சொந்த வாகனங்களில் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை வழியாக தங்களது இலக்குக்கு செல்லவும். அதே போல விடுமுறையை கழித்து விட்டு சென்னைக்கு வரும் பொழுதும் அதே சாலையை பயன்படுத்த வேண்டும்.

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும், பயணிகள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே போல விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை நோக்கி வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு நோக்கி வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலை அல்லது ஸ்ரீபெரும்புத்தூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று சென்னையைச் சென்று அடையலாம்.

சிங்கப்பெருமாள்கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம் - ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பி விடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை வந்தடையலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக காட்டாங்குளத்தூர், மறைமலை நகர் , பொத்தேரி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும், பயணிகள் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே போல, பயணிகளின் வசதிக்காக நாளை (அக்.16) முதல் வரும் 19ஆம் தேதி வரை 2,092 சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.