குறைந்த காற்றின் வேகம்... பாம்பன் பாலத்தில் மீண்டும் இயக்கப்படும் ரயில்கள்

குறைந்த காற்றின் வேகம்... பாம்பன் பாலத்தில் மீண்டும் இயக்கப்படும் ரயில்கள்

பாம்பன் பாலம் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. புயலானது சென்னை, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்று (நவ.30) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

டிட்வா புயலால் தற்போது இலங்கை முழுவதும் அதிகனமழை பெய்து வரும் நிலையில் புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இங்கும் மழை அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த புயல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர 14 மாவட்டங்ளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. மேலும் சூறைக்காற்றும் அப்பகுதியில் வீசியது. இதனால் பாம்பன் பாலப் பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் காற்றின் வேகம் குறைந்து மணிக்கு 42 கிலோமீட்டர் என்ற அளவில் வீசுகின்ற காரணத்தால் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதேபோன்று கடல் சீற்றமும் குறைந்துள்ளது. இதனை அடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்ற ரயில்கள் மற்றும் ராமேஸ்வரத்திற்கு வருகின்ற ரயில்கள் அனைத்தையும் பாம்பன் வழியாக இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

இதன்படி வண்டி எண்: 22662 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில், வண்டி எண்: 16752 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், வண்டி எண்: 22621 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் (இந்த ரயில் தற்காலிகமாக மண்டபம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்), வண்டி எண்: 56716 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும்.

வண்டி எண்: 56713 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வண்டி எண்: 56715 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வண்டி எண்: 20849 புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் (இந்த ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்) உள்ளிட்ட ரயில்கள் ராமேஸ்வரம் வரை செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.