குளிர்காலத்தில் பீரியட்ஸ் வலி அதிகமாகிறதா? இது தான் காரணமாம்
காலநிலை மாற்றம் குறிப்பாக, குளிர்க்காலம் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளை கூடவே அழைத்து வருவது போல சில சமயங்களில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில், குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் (Menstrual Cycle) சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
மற்ற காலநிலை போல் இல்லாமல் குளிர் அல்லது மழைக்காலங்களில் பெண்கள் தங்களது மாதவிடாயில் சில மாற்றங்களை அனுபவிக்கின்றனர். அதாவது, மாதவிடாய் தாமதமாக ஏற்படுவது, ரத்த ஓட்டம் அதிகரிப்பது போன்றவையை எதிர்கொள்கின்றனர். உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா?
Age-Dependent and Seasonal Changes in Menstrual Cycle Length and Body Temperature Based on Big Data என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரையில், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை போல் காலநிலை மாற்றம் ஹார்மோன் சமநிலை மற்றும் மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, குளிர்காலம் மாதவிடாய் சுழற்சியில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும், அதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை சமாளிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் மாதவிடாயில் ஏற்படும் பொதுவான மாற்றங்கள்:
குளிர் காலத்தில் பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியில் பின்வரும் பொதுவான மாற்றங்களை அனுபவிக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாரு.
மாதவிடாய் தாமதமாகலாம்: குளிர்காலத்தில், மாதவிடாய் சுழற்சியின் சராசரி நாட்கள் அதிகரிக்கலாம். அதாவது, உங்கள் சுழற்சி வழக்கமாக 28 நாட்களாக இருந்தால், அது 30 அல்லது 31 நாட்களாக மாற வாய்ப்புள்ளது. ஹார்மோன் சமநிலையின் மீது குளிர் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக சினைப்பையில் இருந்து முட்டை வெளியாகும் செயல்முறை (Ovulation) சற்று தாமதமாகலாம். இது ஒட்டுமொத்த சுழற்சியையும் நீடித்து மாதவிடாய் காலத்தை தள்ளிப்போடுகிறது.
மாதவிடாய் ரத்த ஓட்டம் அதிகரிக்கலாம்: பல பெண்கள் குளிர்காலத்தில் தங்கள் மாதவிடாய் ரத்த ஓட்டம் (Menstrual Flow) வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை உணர்கின்றனர். இது சில ஆய்வுகளில், குளிர்ச்சியான மாதங்களில் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் நிகழலாம் என்று தெரியவந்துள்ளது. ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பது கருப்பை சுவரின் தடிமன் மற்றும் ரத்தப்போக்கின் அளவை அதிகரிக்கலாம்.
வலி கூடுதலாக இருக்கலாம்: வழக்கமாக மாதவிடாய் பிடிப்புகளை அனுபவிக்கும் பெண்களுக்கு, குளிர்காலத்தில் அதன் தீவிரம் அதிகரிக்கலாம். குளிர்ச்சியான சூழலில் ரத்த நாளங்கள் சுருங்குகின்றன (Vasoconstriction). இது கருப்பைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைத்து, தசைகளில் பிடிப்புகளையும் வலியையும் அதிகப்படுத்தலாம். மற்ற காலங்களை விட குளிர்க்காலங்களில் மாதவிடாயில் மாற்றங்கள் ஏற்பட காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
காரணம் என்ன?
வைட்டமின் டி குறைபாடு: குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பதால், உடலில் வைட்டமின் டி அளவு குறையலாம். வைட்டமின் டி ஹார்மோன் உற்பத்தியில், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் சமநிலையில், முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் குறைபாடு சுழற்சியை பாதிக்கலாம்.
மெலடோனின் மற்றும் தூக்கம்: குளிர்காலத்தில் பகல் நேரம் குறுகி, இரவு நேரம் நீடிப்பதால், நம் உடலில் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தி அதிகமாகிறது. மெலடோனின் ஹார்மோன், இனப்பெருக்க ஹார்மோன்களுடன் தொடர்புடையது. இதன் மாற்றம் மாதவிடாய் சுழற்சியின் காலத்தை மறைமுகமாக பாதிக்கலாம்.
உடல் உழைப்பு குறைவது: குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வது குறைவதால், உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) பாதிக்கப்படுகிறது. உடல் சுறுசுறுப்பு குறைந்தால், ரத்த ஓட்டம் குறைந்து, சுழற்சி ஒழுங்கற்றதாக மாறலாம்.
சமாளிப்பது எப்படி?
- சூடான தண்ணீர் அல்லது மூலிகை டீ அருந்துவது, சுருங்கிய ரத்த நாளங்களைத் தளர்த்தவும், பிடிப்புகளைக் குறைக்கவும் உதவும்.
- குளிர்க்காலங்களில் தினமும் லேசான உடற்பயிற்சி அல்லது யோகா செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, பிடிப்புகளைக் குறைக்கும்.
- மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ளலாம் அல்லது சூரிய ஒளி கிடைக்கும் நேரங்களில் சிறிது நேரம் வெளியில் செலவிடலாம்.
- இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை கீரை, பீட்ரூட், பேரீச்சம்பழம் அதிகம் உண்பது, ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஏற்படும் சோர்வைத் தவிர்க்க உதவும். இந்த மாற்றங்கள் முற்றிலும் இயல்பானவை என்றாலும், உங்கள் மாதவிடாய் சுழற்சியில் திடீரென அல்லது தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டால், தாமதிக்காமல் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.