சிறுநீர் தொற்று பிரச்னை! இப்படியும் வருமா?

சிறுநீர் தொற்று பிரச்னை! இப்படியும் வருமா?

சிறுநீர் பாதை தொற்று அல்லது 'யுடிஐ' (UTI - Urinary Tract Infection) என்பது இன்றைய காலக்கட்டத்தில் பலரும் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான உடல்நல பிரச்சனையாகும். பெண்கள் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும்போதோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போதோ பொது கழிப்பறைகளை பயன்படுத்த மிகவும் அஞ்சுகிறார்கள்.

பொது கழிப்பறையை பயன்படுத்தினால் உடனே தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. ஆனால், உண்மையில் பொது கழிப்பறைகளை பயன்படுத்தினால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாது என பல ஆய்வுகள் தெளிவுப்படுத்துகின்றன. இப்படியிருக்க, சிறுநீர் பாதை தொற்று ஏற்பட காரணம் என்ன? பாதுகாப்பாக இருக்க என்ன செய்வது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

யுடிஐ (UTI) என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? சிறுநீர் பாதை தொற்று என்பது பாக்டீரியாக்கள் (முக்கியமாக நம் குடலில் வாழும் இ-கோலை - E.coli பாக்டீரியா) சிறுநீர்க்குழாய் வழியாக உடலுக்குள் நுழைந்து பெருகுவதால் ஏற்படுகிறது. இது சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க்குழாய்களைப் பாதிக்கலாம். பொதுவாக, ஒருவரது மலக்குடல் பகுதியிலிருந்து இந்த கிருமிகள் சிறுநீர்க்குழாய் பகுதிக்கு நகர்வதாலேயே தொற்று உருவாகிறது என NIH ஆய்வு கூறுகிறது.

கழிப்பறை இருக்கைக்கும் தொற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன? மருத்துவர்களின் கூற்றுப்படி, பொதுக் கழிப்பறை இருக்கையில் அமர்வதால் மட்டும் ஒருவருக்கு யுடிஐ ஏற்படுவது மிக அரிதானது. இதற்கான முக்கிய காரணங்களின் விவரம் பின்வருமாறு.

  • கழிப்பறை இருக்கையில் அமரும்போது நம்முடைய தொடைகள் மற்றும் பின்புறத் தோல் மட்டுமே இருக்கையைத் தொடுகிறது. இந்தத் தோல் கிருமிகளுக்கு எதிராக ஒரு வலுவான அரணாகச் செயல்படுகிறது. நம் உடலின் சிறுநீர் வெளியேறும் துவாரம் நேரடியாக இருக்கையுடன் தொடர்பு கொள்வதில்லை.
  • கழிப்பறை இருக்கைகள் பெரும்பாலும் கடினமான, நுண்துளைகளற்ற பொருட்களால் ஆனவை. இத்தகைய பரப்புகளில் யுடிஐ-ஐ உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அதிக நேரம் உயிர்வாழ முடியாது.
  • இருக்கையில் இருக்கும் பாக்டீரியாக்கள் தானாகவே நகர்ந்து ஒருவரது சிறுநீர்க்குழாய்க்குள் நுழைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

உண்மையான ஆபத்து எங்கே இருக்கிறது? பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து இருக்கையில் இல்லை, மாறாக நம்முடைய பழக்கவழக்கங்களில்தான் உள்ளது:

கோப்புப்படம்
  • பொது கழிப்பறை அசுத்தமாக இருக்கும் என்று அஞ்சி, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையில் வேகமாக வளர வழிவகுக்கும். இதுவே தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகும் என 2022ம் ஆண்டு NCBI ஆய்வுத்தளத்தில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கழிப்பறை செல்ல வேண்டியிருக்குமே என்ற பயத்தில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது சிறுநீரை அடர்த்தியாக்கி, தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
  • இருக்கையில் அமரப் பயந்து கொண்டு பாதி அமர்ந்த நிலையில் (Squatting/Hovering) சிறுநீர் கழிப்பது, சிறுநீர்ப்பை முழுமையாகக் காலியாவதைத் தடுக்கும். தங்கிப்போகும் சிறுநீரில் பாக்டீரியாக்கள் எளிதில் வளரும்.

தற்காப்பு நடவடிக்கைகள்: பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நல்லது:

  • வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் முன், இருக்கையைச் சானிடைசர் (Toilet Seat Sanitizer) கொண்டு சுத்தம் செய்யலாம்.
  • சிறுநீர் கழித்த பின் எப்போதும் முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக (Front to Back) துடைப்பதை உறுதி செய்யுங்கள்.
  • கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்.
  • போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டாம்; தாகத்தைத் தணிக்கவும், கிருமிகளை வெளியேற்றவும் தண்ணீர் அவசியம்.

சுருக்கமாகச் சொன்னால், பொதுக் கழிப்பறைகள் மட்டுமே யுடிஐ-க்கு நேரடி காரணமல்ல. அசுத்தமான இருக்கைகளை விட, அசுத்தமான கைகளால் பிறப்புறுப்பைத் தொடுதல் மற்றும் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்தல் போன்ற தவறான சுகாதாரப் பழக்கவழக்கங்களே தொற்றைத் தூண்டுகின்றன.