வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய அணி!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிகமுறை தொடரை கைப்பற்றிய அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை சமன் செய்துள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் அந்த அணி 270 ரன்கள் பின் தங்கியதுடன் பாலோ ஆனானும் ஆனாது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஜான் காம்பெல் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் தங்களின் சதங்களைப் பதிவு செய்ததுடன் அணியையும் முன்னிலைப் படுத்தினர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன், இந்திய அணிக்கு 121 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்(8), சாய் சுதர்ஷன்(39), ஷுப்மன் கில் (13) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்ததுடன் 58 ரன்களை அடுத்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேசமயம், தொடர் முழுவதும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என கலக்கிய ரவீந்திர ஜடேஜாவிற்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி படைத்த சில சாதனைகளை இப்பதிவில் பார்ப்போம்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம், சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிகமுறை தொடரை கைப்பற்றிய அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை சமன் செய்துள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்க அணி 1998-2024ஆம் ஆண்டு வரையிலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தொடர்ச்சியா 10 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது.
ஆனால் தற்சமயம் இந்திய அணி 2002 முதல் 2025 வரையிலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று, தென்னாப்பிரிக்காவின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 2000 முதல் 2022வரையிலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தொடர்ச்சியாக 9 முறை தொடரைக் கைப்பற்றி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒரு எதிரணிக்கு எதிராக தோல்வியைத் தழுவாமல் அதிக போட்டிகளை எதிர்கொண்ட அணிகள் பட்டியலில் இந்தியா, 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 2002-2025 வரையிலும் வெஸ்ட் இண்டீஸுடன் 29 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் ஒரு முறைக் கூட தோல்வியையே சந்திக்காமல் அசத்தியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 1930 முதல் 1975 நியூசிலாந்துக்கு எதிராக 47 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக தோல்விகளைச் சந்தித்த அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் பெற்றியைப் பெற்றதில்லை. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 2008-13 வரையிலும், இந்தியாவில் விளையாடிய 7 டெஸ் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றியை பெறாமல் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.