எனக்கு கிடைக்கும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை - பேட்டிங் வரிசை குறித்து மௌனம் கலைத்த வாஷிங்டன் சுந்தர்
அணிக்குத் தேவைப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்து, தனக்கு ஒதுக்கப்பட்ட எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாடத் தயாராக இருப்பதாக இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 201 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்களை எடுத்துள்ளது. இதில் மார்க்ரம் 12 ரன்களையும், ரிக்கெல்டன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 314 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்க அணி ஆட்டத்தை தொடரவுள்ளது. இதனால் இப்போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய அணி பெரிதளவில் சோபிக்க தவறினர். அதேசமயம் இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேற்கொண்டு பேட்டர்களின் பேட்டிங் வரிசையிலும் மாற்றங்கள் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அதன்படி, முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் வாஷிங்டன் சுந்தர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார். தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் அவர் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் கடைசியாக விளையாடிய 7 டெஸ் போட்டிகளில் அவர் 5, 8, 9, 7, 3 மற்றும் 8ஆம் இடங்களில் களமிறக்கப்பட்டு வருகிறார். அவர் சிறப்பாக செயல்படும் நிலையிலும், அவரது பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு வருவது விவாதமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில் அடிக்கடி தனது பேட்டிங் வரிசை மாற்றப்படுவது குறித்து பேசிய வாஷிங்டன் சுந்தர், "அணி என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புகிறதோ அங்கு பேட்டிங் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறுவேன். அந்தவகையில் இது இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஏனெனில் இது ஒரு குழு விளையாட்டு. உண்மையைச் சொன்னால், அணிக்குத் தேவைப்படும் போது, அவர்கள் கூறுவதை கேட்டு முன்னேறி செல்லும் கிரிக்கெட் வீரராக இருக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதனால் அவர்கள் என்னிடம் கூறும் போது நான் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் தயாராக இருப்பதுடன், அணிக்காக சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும். நான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அதனை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். மேலும் எனக்கு தற்சமயம் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன். அதனால் என்னுடைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் தயாராக உள்ளேன்" என்றார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்ஸில் 29 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்களையும் சேர்த்தார். தற்சமயம் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் 8ஆம் வரிசையில் களமிறங்கிய அவர் 48 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.