நெல்லையை புரட்டிப்போட்ட கனமழை... ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து சேதம்!
தொடர் மழை காரணமாக நெல்லையில் நேற்று ஒரே நாளில் 15 பேரின் வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
இதனால், நேற்று இரவு மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகளிலிருந்து 16,000 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக தமிழக பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் மழை நிலவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
15 வீடுகள் இடிந்து சேதம்
இதற்கிடையே, மழையால் ஆங்காங்கே பொதுமக்களின் வீடுகள் இடிந்து சேதமாகி வருகிறது. நேற்று (நவ.24) ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பல ஓட்டு வீடுகள் இடிந்துள்ளது.
மேலும், மழையால் நீர்நிலைகளும் நிரம்பி வழிவதால் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், பல்வேறு வீடுகள் இடிந்து சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
அதேபோல, சேரன்மகாதேவி தாலுகாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6 வீடுகளில் இடிந்து சேதமாகியுள்ளது. ஆகையால், வருவாய்த்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக, சேரன்மகாதேவி அருகே கூனியூரில் கூலி வேலை பார்த்து வரும் சங்கர குமார், ஓட்டு வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். தொடர் மழையால் அவரது வீட்டில் ஈரம் பொங்கி, நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது, வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல், அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(66) என்பவரது வீடும் இடிந்து சேதமானது. இதுகுறித்து ஆறுமுகம் கூறியதாவது, “நேற்று முன்தினம் வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, நான் வீட்டிற்குள்ளே இருந்தேன், எனது மனைவியும் (சிங்காரி-52) வெளியே சென்றிருந்தார். அதனால், பேரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. நான் கூலி வேலை செய்து வருகிறேன். எங்களுக்கு பெரியளவில் வாழ்வாதாரம் இல்லை. ஆகையால், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.