‘SIR என்பது மத்திய அரசின் திட்டமிட்ட சதி, ஜனநாயக மோசடி’ - வைகோ ஆவேசம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது மத்திய அரசின் திட்டமிட்ட சதிச்செயல், ஜனநாயக மோசடி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 50 ஆம் ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அந்த கல்லூரியில் 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, காயிதே மில்லத் பற்றிய புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர், “எஸ்ஐஆர் என்பது மத்திய அரசின் திட்டமிட்ட சதிச்செயல், ஜனநாயக மோசடி. இதில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆகையால், திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் விழிப்போடு இருந்து விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும், புதிதாகத் திணிக்கப்பட்ட போலி வாக்காளர்களை நீக்கவும் வேண்டும்.
மேலும், இங்குள்ள ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வரலாற்றிலேயே அவமானத்தை தேடிக் கொடுப்பவராக இருக்கிறார். மத்திய பாஜக அரசின் ஒரு ஏஜெண்டாகவும், எடுபிடியாக ஒவ்வொரு நாளும் ஏதாவது உளறிக் கொண்டு இருக்கிறார். செந்தமிழ் மொழியை பற்றி ஆர்.என். ரவிக்கு என்ன தெரியும்? அதனுடைய அரிச்சுவடி பற்றி எதாவது அறிவாரா?
இந்துத்துவக்காரர்கள் எழுதிக் கொடுப்பதை, அப்படியே வாசித்துக் கொண்டிருக்கிறார். அவர் தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாகவும், இடராகவும், இடையூறாகவும் இருந்து கொண்டிருக்கிறார். மத்திய அரசு அவரை வைத்து ஆட்டம் போடுகிறது.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ஏனென்றால், பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை பெறாத அளவுக்கு முதலீடுகளை பெற்று அனைத்து துறைகளும் வளர பாடுபட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் திமுகவை தீயசக்தி என்ற விஜய்யின் பேச்சுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். யார் என்ன முயற்சி செய்தாலும், திமுக கூட்டணி தான் 2026-ல் வெற்றி பெறும். தனித்தே ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்மை திமுகவுக்கு உண்டு. வெற்றி உறுதியாக திமுக கதவை தட்டும், மனக்கோட்டை கட்டிய நபர்கள் கடுமையான ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள்” என தவெக தலைவர் விஜய்யை குறிப்பிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.