பீகாரில் செய்தது போல் தமிழ்நாட்டில் செய்ய முடியாது - எஸ்.ஐ.ஆர் குறித்து எம்.பி துரை வைகோ பேச்சு!
பீகாரில் செய்ததை போல் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழ்நாட்டில் செய்ய முடியாது என எம்.பி துரை வைகோ கூறியுள்ளார்.
கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமையவிருக்கும் தனியார் உயிரி மருத்துவக் கழிவு தொழிற்சாலைக்கு எதிராக கடந்த 29 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் தொடர் காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கிராம மக்களை இன்று திருச்சி எம்.பி துரை வைகோ நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, ”மருத்துவக் கழிவு ஆலை மக்கள் அதிகம் வசிக்காத இடங்களிலும், விவசாயம் நடைபெறாத இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த பிசானத்தூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 500 மீட்டருக்குள் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட இருப்பதால் அதனை மக்கள் எதிர்க்கும் கோரிக்கை நியாயமானது.
கந்தர்வக்கோட்டையில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் உண்டு. இந்த ஆலைக்கு எதிராக இங்கு இருக்கக்கூடிய பெண்களே அதிகமான பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இப்பகுதியில் ஆலை அமைத்தால் நிச்சயமாக 40 கிராமங்கள் வரையிலும் பாதிக்கப்படும். அதனால் பிசானத்தூர் கிராமத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்கப்படக்கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்றார்.
கிராமப்புறங்களில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்புவதில் மக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்த கேள்விக்கு, “கடந்த காலங்களில் எஸ்.ஐ.ஆர் திருத்தங்கள் என்பது அதிகபட்சம் மூன்றாண்டு காலங்கள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு நடத்தப்பட்டது. தற்போது ஒரு மாத காலத்திற்குள் அவசர அவசரமாக எஸ்.ஐ.ஆர் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நடத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் முந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரி பார்த்து எழுதும் அளவிற்கு போதிய வசதி இல்லை. தகுதியுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும், தகுதியில்லாத வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட எஸ்.ஐ.ஆர் அதன் நோக்கத்தை இழந்து விடும்.
எஸ்.ஐ.ஆர் கொண்டு வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. அதனை நிறைவேற்றும் நடைமுறையை தான் எதிர்க்கிறோம். பண்டிகை காலம் என்பதால் மக்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு சென்று விடக்கூடிய சூழலில் அவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது” என்றார்.