கரூர் துயர சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜரான விஜய்

கரூர் துயர சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜரான விஜய்

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார்.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக, கரூர் வேலுச்சாமிபுரம் தொடங்கி தவெக முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, டி.நிர்மல்குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ 20 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த கடந்த 12ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான விஜய்யிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் சிபிஐ தரப்பில் சொல்லப்பட்டது. அடுத்த நாளே இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராக சிபிஐ தரப்பில் கூறப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு விசாரணைக்கு வருவதாக விஜய் தெரிவித்ததாகவும், சிபிஐ தரப்பு அதனை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று (ஜன 19) இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ தரப்பு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நேற்றே தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தார். இன்று காலை 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்று சொல்லப்பட்ட நிலையில், அரை நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்றுள்ளார்.

இன்று விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதாகவும், முதற்கட்ட விசாரணை போன்றே இந்த முறையும் எழுத்துப்பூர்வமாகவும் வீடியோவாகவும் அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.