எருது விடும் விழாவில் பரிதாபம்: காளை முட்டியதில் முதியவர் உயிரிழப்பு – இன்ஸ்பெக்டர் உட்பட 26 பேர் காயம்
எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது காளை முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள கோவிந்த ரெட்டி பாளையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று காலை எருதுகள் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பாய்ச்சல் காளைகள் கொண்டு வரப்பட்டு, வீதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக விடப்பட்டன. விழாவின் பாதுகாப்புப் பணிக்காக சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜய் பாஸ்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், திடீரென ஓடிய ஒரு காளை இன்ஸ்பெக்டர் விஜய் பாஸ்கரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காளைகள் ஓடும் பாதையில் நின்றிருந்த பார்வையாளர்களை அப்புறப்படுத்தினார்.
இருப்பினும், ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் தொடர்ந்து வந்ததால், வீதியில் நின்றிருந்த பார்வையாளர்களை காளைகள் முட்டியதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட சுமார் 26 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுகானூர் பகுதியைச் சேர்ந்த திலகர் (65) என்பவர், தனது மகள் புவனேஸ்வரி வீட்டிற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வந்திருந்தார். இந்நிலையில், விழாவைக் காண காளைகள் ஓடும் பாதையோரத்தில் நின்றிருந்த போது, ஒரு காளை அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த திலகர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
எருதுகள் விடும் விழாவில் காளை முட்டி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவிந்த ரெட்டி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் திருவிழாவின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், எதிர்பாராத விதமாக காளைகள் பார்வையாளர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.