பெற்றோரை இழந்து கண்ணீரோடு நின்ற குழந்தைகள்: செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்

பெற்றோரை இழந்து கண்ணீரோடு நின்ற குழந்தைகள்: செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்

பெற்றோரை இழந்து ஆதரவின்றி கூரை வீட்டில் வசித்த வந்த குழந்தைகளை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேரில் சந்தித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர். மேலும், முதலமைச்சர் தொலைபேசியில் குழந்தைகளுடன் பேசி, அனைத்து உதவிகளும் செய்வதாக தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் - சுமதி தம்பதிக்கு சுவாதி, சுவேதா, சிவேஷ்வர் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் தந்தை சிவக்குமார் சொற்ப வருவாயில் தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிவக்குமாரின் மனைவி சுமதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சுவாதி, சுவேதா இருவரும் கூத்தாநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். மூன்றாவது மகன் சிவேஸ்வரன் அரசு உதவி பெறும் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தந்தை சிவக்குமார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். தற்போது தாய் தந்தையை இழந்து மூன்று பேரும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். தாய் மற்றும் தந்தையரின் உறவினர்கள் யாரும் இவர்களை கண்டு கொள்ளாத நிலையில் மூன்று பேரும் சொல்லனா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இவர்கள் ஆற்றுப் புறம்போக்கு நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். மூன்று பேரும் பள்ளிக்கு செல்வதால் வருமானம் இன்றி அன்றாடம் வாழ்க்கையை நடத்தும் நிலையில் உள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் கூரைகளும் பழுதடைந்து ஓட்டையாகி வெயில், மழை, குளிர் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் குளியலறை கூட மேற்கூரை இன்றி பாலித்தீன் பேப்பர் துணியைக் கொண்டு மறைவிடம் அமைத்து அதில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மூன்று பேருக்கும் வீட்டின் அருகில் இருப்போர் அவர்களால் முடிந்த சிறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலிலும் மூன்று பேறும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தாமல் ஆர்வமுடன் முயன்று நன்கு படித்து வருகின்றனர். மூவரும் பெற்றோரை இழந்து வறுமையில் வாடினாலும் மூத்த மகள் சுவாதிக்கு செவிலியர் ஆகி மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது கனவாக உள்ளது. தாய் தந்தையை இழந்து தனியாக வசித்து வரும் இப் பிள்ளைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தாய் தந்தையை இழந்து தவிக்கும் சுவாதி, சுவேதா, சிவனேஸ்வர் ஆகியோரை அமைச்சர் டி. ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் அவர்களது வீட்டுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.

தொடர்நது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போன் மூலமாக சுவாதி, சுவேதா மற்றும் சிவனேஸ்வரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குழந்தைகளிடம் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.